உங்கள் கணிணி மிக மெதுவாகச் செயல்படுகிறதா ??? இதை செய்து பாருங்கள் !!
மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும். 1. உங்கள் கணிணியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் சி வட்டியக்கி (ட்ரைவ்) முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும்.
அ. இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுமுன் உண்மையிலேயே அது தேவையான கோப்புதானா என்று பார்த்துக்கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள். அக்கோப்பின் பயன்பாடு முடிந்தபின் அதை அழித்துவிடுங்கள்.
ஆ. உங்களுக்குப் பயன்படாத மென்பொருட்களைத் தேவையில்லாமல் சேமித்து வைக்கவேண்டாம்.
இ. புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள், பாடல்கள் இவற்றைத் தனியாக ‘சி டி’ ‘டிவிடி’க்களில் பதிந்து வைத்துக்கொண்டால், ‘ஹார்ட் டிஸ்க்’ இடமும் மிச்சமாகும். உங்கள் கணிணி பாதிப்படைந்தாலும், இவை பத்திரமாகவே இருக்கவும் உதவும்.
ஈ. ‘ஸ்டார்ட்’ ஐச் சொடுக்கவும். ‘ரன்’ என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் ‘%Temp%’ என்று தட்டச்சு செய்து ‘Enter’ ஐத் தட்டவும். தற்காலிகமாகத் தேவைப்பட்ட, சேமிக்கப்பட்ட கோப்புகள் உள்ள Folder திறக்கப்படும். அதில் உள்ள கோப்புகளை எல்லாம் முழுமையாக அழித்துவிடவும்.
உ. தேவைப்படாத கோப்புகளை அழிக்கையில் ‘Shift Key’ஐப் பிடித்துக்கொண்டு அழிப்பதன் மூலம், Recyecle Binல் கோப்புகள் சேராமல் நேராக அழிக்கப் படும். அடிக்கடி உங்கள் Recycle Binஐக் காலி செய்வது அவசியம். ஏனினெல் அழிக்கப்பட்ட கோப்புகள் Recycle Binஇல் இருக்குமானால் உங்கள் சி டிரைவின் இடத்தை அது எடுத்துக்கொள்ளுவதாகவே ஆகிறது.
2. உங்கள் கணிணித் திரையில் ‘WallPaper’ பயன்படுத்தாதீர்கள். அது கணிணிச் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கக் கூடியது.
3. கூடியவரை ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறப்பது, பல மென்பொருட்களைப் பயன்படுத்துவது வேகத்தைக் குறைக்கும். தேவையென்றால் ஒழிய, பல கோப்புகளைத் திறந்து வைக்கவேண்டாம். அப்படி ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறக்க நேர்ந்தால், அப்பொழுது பயன்படுத்தும் கோப்பைத்தவிர மற்றவற்றைச் சிறிதாக்கி (Minimize) வைக்கவும்.
4. கணிணியில் பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்வது உங்களுக்குச் சுகம்தான். ஆனால் உங்கள் ‘RAM’ இன் சக்தி கண்டிப்பாகக் குறைந்துவிடும். முடிந்தால் இதைத் தவிர்க்கலாம்.
5. உங்கள் கணிணியில் ‘விண்டோஸ்’ ஒவ்வொரு முறை துவக்கப்படுகையிலும், அத்தனை எழுத்துருக்களையும்(Fonts) லோட் செய்கிறது. இதனாலும், தாமதம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் பயன்படுத்தாத எழுத்துருக்களை கணிணியில் இருந்து நீக்கி விடலாம். அதற்கு, உங்கள் C:\Windows சென்று Fonts ஃபோல்டரைத்திறந்து, தேவைப்படாத எழுத்துருக்களை அழித்துவிடுங்கள். (எ.கா. Windings). உங்கள் கணிணி பயன்படுத்தும் எழுத்துருக்கள் சிவப்பு நிறத்தில் A என்ற எழுதப்பட்டிருக்கும். அவற்றை அழித்து விடக்கூடாது. கவனம்.
6. பொதுவாக கணிணியில் கோப்புகள் பதியப்படும்பொழுது துண்டாக்கப் பட்டுப் பதியப்பட்டிருக்கலாம் (Fragmentation). இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொரு முறை அந்தக் கோப்பைத் திறக்கும்பொழுதும் கணிணி அந்த முழுக் கோப்பின் துண்டுகளைத்தேடித் தேடி இணைத்துத் தருகிறது. இதனால் நீங்கள் கோப்பைத் திறக்கத் தாமதமாகிறது. இப்பிரச்னை,நீங்கள் குறைந்தது மாதம் ஒருமுறையாவது உங்கள் கணிணியை Defragmentation செய்வதன் மூலம் தீர்ந்துவிடும். எப்பொழுதெல்லாம் உங்கள் கணிணியில் ஏராளமான கோப்புகள் குவிந்து விடுகின்றனவோ, உங்கள் கணிணி வட்டியக்கியில் (டிஸ்க் ட்ரைவ்) உள்ள காலியிடம் 15 சதவீதத்திற்கு கீழ் வந்துவிடுகையிலோ, நீங்கள் உங்கள் கணிணியில் புதிய நிரல்கள் அல்லது ‘விண்டோஸ்’ மென்பொருளின் சமீப வெளியீடு எதையாவது நிறுவுகையிலோ நீங்கள் Defragmentation செய்வது மிகவும் அவசியம்.
7. CCleaner என்ற நிரலானது உங்கள் கணிணியில் உள்ள தற்காலிகக்கோப்புகள், தேவையற்ற கோப்புகளை நீக்கவும், உங்கள் ‘Registry’ யில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யவும் உதவுகிறது.
8. XP Boot Logo ஒவ்வொரு முறையும் உங்கள் கணிணியை இயக்குகையில் நிறுவப்படாதவாறு முடக்கம் செய்யுங்கள்.
9. தேவையற்ற பயன்படாத Portகளை முடக்கிவையுங்கள்
10. உங்கள் Hard Disk ஐ, பிரித்து ‘சி’ ‘டி’, ‘இ’ எனத்தனித்தனியாக வைப்பது உங்கள் கணிணியில் செயல்பாடு வேகமடைய உதவும்.
11. அடிக்கடி உங்கள் கணிணியின் தட்டச்சுப் பலகை, கணிணி எலி, கணிணியில் உள்ள விசிறி முதலியவற்றைச் சுத்தம் செய்யுங்கள்.
12. உங்கள் கணிணியில் நச்சுநிரல்களை கண்டறிவதற்கான/அழிப்பதற்கான நிரல்களை அடிக்கடி பயன்படுத்துங்கள். பல நேரங்களில் நச்சு நிரல்கள், கணிணியில் செயல்படும் திறனைக் குறைக்கின்றன.
13. சமீபத்தில் பார்க்கப்பட்ட கோப்புகள் என்ற பயன்பாட்டை நீங்கள் உபயோகப்படுத்துவதில்லை எனில், அதை நிரந்தரமாக முடக்கி வைக்கலாம். இது உங்கள் கணிணியின் வேகத்தைக் குறைக்கும் ஒரு செயல்பாடு. அதை முடக்குவதன்மூலம் உங்கள் கணிணியின் வேகம் அதிகரிக்கிறது.
14. உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வேறு இடத்தில் சேமித்தபின் உங்கள் கணிணியை ‘Reformat’ செய்யுங்கள். உங்கள் கணிணியின் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய எளிய வழி இது.
15. இணையத்தில் தேவையற்ற விளம்பரங்கள் வந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க ‘AdBlocker’ பொருத்துங்கள்.
16. இது எல்லாவற்றையும் விட மிகவும் எளிய வழி……ஒரு புதிய நவீனமான கணிணியை வாங்கி விடுங்கள்.